புதன், 18 ஜனவரி, 2017

குளோரிந்தா அம்மையார்

குளோரிந்தா அம்மையார் (1746 - 1806)

1746ம் ஆண்டு தஞ்சாவூரில் இந்து பிராமண குடும்பத்தில் கோகிலா என்ற பெண் பிறந்தாள். சிறு வயதிலேயே தன் பெற்றோர்களை இழந்ததினால் அவளுடைய தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவளுடைய தாத்தா   தஞ்சாவூரிலே மராட்டிய மன்னனாக இருந்த சரபோஜி என்பவரின் அரண்மனையில் பெரிய குருவாக இருந்தார். சிறு வயதிலேயே கோகிலா சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மாராட்டிய மொழிகளை நன்கு கற்று தேர்ந்தாள். தனது 12 – ம் வயதில் ஒரு கோவிலில் மந்திரங்கள் சொல்வதற்க்கு செல்லும் வழியில் ஒரு கொடிய விஷப்பாம்பு அவளை கடித்தது. அப்போது அங்கு வந்த ஆங்கிலேய போர் வீரன் ஜான் லிட்டில்டான் என்பவர்  அவளை காப்பாற்றினார். கோகிலாவின் 13ம் வயதில் மராத்தி பிராமண பண்டிதருடன் திருமணம் முடிந்தது. எதிர்பாராதவிதமாக கோகிலா கணவர் ஓராண்டுக்குள் மரித்துப் போனார். எனவே அப்போது இந்து சமுதாய தர்மத்தின் அடிப்படையில் கணவன் மரித்து விட்டால் அவனோடு உயிரோடு இருக்கும் மனைவியையும் சிதையிலே தள்ளிவிட்டு எரித்து விடுவார்கள். இது சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்பதாகும்.
அவளுடைய கணவனுடைய சிதையில் இவளை ஜனங்கள் தள்ளிவிட எத்தனிக்கும் போது அவள் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அங்கு வந்த ஆங்லேய கர்னல் ஜான் லிட்டில்டான் மீண்டும் அவளை காப்பாற்றுகிறார். இதை பார்த்து ஆத்திரமடைந்த பிராமண பண்டிதர்கள் கோகிலா ஊருக்குள் வரக்கூடாது என்றும் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள கூடாது என்றும், யாரவது அவளுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தனர். எனவே இந்த இளம் விதவையை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத போது அந்த கர்னல் ஜான் லிட்டில்டான் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். இப்போது இந்த கர்னல் பாளையம்கோட்டைக்கு தஞ்சாவூரிலிருந்து மாற்றப்பட்டார். அங்கு கோகிலாவுக்கு அந்த கர்னல் தன் தாயின் பெயரான கிளராவோடு இந்தியா என்றும் சேர்த்து கிளாரா இந்தியா என்று பெயர் சூட்டினார். காலப்போக்கில் கிளாரிந்தா என்று அழைக்கப்பட்டாள். பின்பு அவளுக்கு ஆங்கிலம் மூலம் இயேசுகிறிஸ்துவை அறிவித்தார் மேலும் திருச்சபைக்கும் அழைத்துச் சென்றார். இப்படியாக குளோரிந்தா இயேசுவின் அன்பை பெற்றவளாக தற்பொழுது கிறிஸ்தவளாக மாற விரும்பினாள்.
இந்த நிலையில் ஆங்கில இராணுவ வீரர்களுக்கு ஊழியம் செய்வதற்காக C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சாவூருக்கும் பின்னர் திருச்சிக்கும் அனுப்பப்பட்டார். இப்போது இவரை சந்திக்க குளோரிந்தா வந்து தான் கிறிஸ்தவளாக மாற வேண்டும் என்றும் அதற்காக ஞானஸ்தானம் தரும்படியாக கேட்டுக் கொண்ட போது C.F. ஸ்வாட்ஸ் அவர்கள் குளோரிந்தா யார் என்பதை அறிந்துகொண்டு அவள் கர்னல் ஜான் லிட்டில்டான் என்பவரின் மறுமனையாட்டியாய் இருந்ததினால் அவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனாலும் குளோரிந்தா மனம் தளராமல் இயேசுவிடம் தன் குறைகளைக்கூறி ஆறுதலைப் பெற்றுக்கொண்டாள். இந்த சூழ்நிலையில் ஜான் லிட்டில்டான் போரில் மரித்துப்போகவே குளோரிந்தா மீண்டும் விதவையானாள். உலகமே அவளுக்கு சூனியமாக தெரிந்தது. ஆனால் ஆண்டவரின் அன்பும், ஆறுதலும் அரவணைப்பும் அவளுக்கு அதிகமாய் கிடைத்தது.
1778 –ம் ஆண்டு ஒருமுறை C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்கள் பாளையங்கோட்டைக்கு ஒரு ஐரோப்பிய திருமணம் நடத்தவும் அநேக ஐரோப்பிய குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுக்கவும் அனுப்பப்பட்டார். அதை கேள்விப்பட்ட குளோரிந்தா மீண்டும் அவரிடம் தனக்கு ஞானஸ்தானம் கொடுக்க விடும்பி கேட்டுக்கொண்டாள். அவளுடைய விசுவாசத்தையும் ஆண்டவர் மீது கொண்ட பற்றையும் அறிந்து குளோரிந்தாவின் 32 – ம் வயதில் 25/02/1778 ஆண்டு அவளுக்கு “ராயல் கிளாரிண்டா” என்று ஞானப் பெயர் சூட்டி ஞானஸ்தானம் கொடுத்தார். குளோரிந்தா மராட்டிய ராஜ் பரம்பரையிலிருந்து வந்ததால் “ராயல்” என்ற பேரை சேர்த்து பெயர் சூட்டினார். குளோரிந்தாவோடு அவர் வீட்டு வேலைக்காரியின் மகன் ஹென்றி (Hendry) என்றும், அந்த வேலைக்காரி சாரா என்றும் ஞானஸ்தானம் பெற்றனர்.
குளோரிந்தா தான் திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவள். இப்போது குளோரிந்தா தேவனின் ஊழிய அழைப்பைப் பெற்று திருநெல்வேலியின் முதல் தமிழ் மிஷனெரியாக மாறி ஊழியம் செய்தாள். இரண்டு ஆண்டுக்குள் 40 பேர் ஞானஸ்தானம் பெற்றனர்.
இப்போது ஓலையால் ஒரு ஆராதனைக் கூடத்தை நடத்த ஒழுங்கு செய்து தனது சுவீசேஷ வேலையை செய்ய ஆரம்பித்தாள். பெண்களுக்காக வீட்டு கூட்டம், மற்றும் சிறு பிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்கவும் ஆரம்பித்தார். குளோரிந்தாவின் ஊழிய வாஞ்சையை பார்த்த அநேக ஆங்கிலேய அதிகாரிகள் உதவியோடு ஒரு சிறிய ஆலயத்தை கட்டி முடித்தாள். 1778 ஆண்டு இந்த ஆலயத்தை C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்கள் பிரதிஷ்டை செய்து குளோரிந்தா திருச்சபை யென்று திறந்து வைத்தார். ஆனால் திருநெல்வேலி மக்கள் இந்த ஆலயத்தை பாப்பாத்தி அம்மாள் கோயில் என்றே அழைத்தனர்.
குளோரிந்தா ஒரு பிராமண பெண் என்பதால் அநேக பிராமணர்கள் ஆண்டவரை பற்றி அறியலானார்கள். சபை ஊழியராக திரு. சத்திய நாதன் பிள்ளை அவர்களை நியமிக்க C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்களுக்கு கடிதம் எழுதினார். இதை ஏற்றுக்கொண்டு திருநெல்வேலியின் முதல் சபை ஊழியராக திரு. சத்திய நாதன் பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டு இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக ஊழியம் செய்து வந்தார்கள். இதன் நிமித்தமாக 1802ம் ஆண்டு சபை உறுப்பினர்கள் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள். குளோரிந்தா அவர்கள் ஊழியத்தில் ஜாதி, குலம், கோத்திரம், பாலினம் என்று பாகுபாடு பாராமல் ஊழியம் செய்ததினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

புதிய விசுவாசிகள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு பள்ளிக் கூடம் கட்ட விரும்பி அதை செயல்படுத்தினார். 1787ல் பள்ளி கட்டிமுடிக்கப்பட்டது. அது தான் இன்று செயின்ட் ஜான்ஸ் கல்லூரியாக விளங்குகிறது. ஒதுக்கப்பட்ட மக்களுக்கு என்று தன்னுடைய செலவில் குடிநீர் வழங்க ஒரு கிணறு வெட்டப்பட்டது. இது இன்றும் பாப்பாத்தி அம்மா கிணறு என்று அழைக்கபடுகிறது. இந்நிலையில் திடீரென உடம்பு சரியில்லாமல் 1806 – ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். குளோரிந்தா திருநெல்வேலி மாவட்டத்தின் “மூலைக்கல்” என்று அழைக்கப்பட்டார். திருநெல்வேலி “விடிவெள்ளி” என்றும் போற்றப்படுகின்றார்கள். ஒரு பிரமாண பெண் கிறிஸ்துவுக்காக ஒரு படி எடுத்து விட்டபடியால் இன்னும்  திருநெல்வேலி மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் கொண்டது. இது எளிதான காரியம் அல்ல. தன்னுடைய வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் அனுபவித்தார்கள். ஆனாலும் ஒருபோதும் இயேசுவை விட்டதில்லை. தன் வாழ்க்கையை தேவநாம மகிமைக்காய் அர்ப்பணித்தார்கள். தேவன் இவர்கள் மூலமாய் பல ஜனங்களை இரட்சித்தார். நீங்கள் இந்த முதல்படியை எடுத்து வைக்க தயாரா?  

https://www.facebook.com/YesuvinSheeshargal
http://yesuvinsheeshargal.blogspot.in/

கருத்துகள் இல்லை: