வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பேசும் | வழிநடத்தும் தேவன்

பேசும்/வழிநடத்தும் தேவன்

“ஏசாயா 30: 21. “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.””

பிரியமானவர்களே! கர்த்தராகிய ஆண்டவர் நம் ஓவ்வொருவருக்கும் தந்திருக்கிற மகா பெரிய வாக்குத்தத்தம் என்னவென்றால், நாம் நடக்கும் வழியில் திசைமாறுகிற சூழ்நிலை வரும்பொழுது  அவருடைய சத்தத்தை கேட்போம் ஆமென்! ஒருவேளை நமக்கு ஒரு கேள்வி உண்டாகலாம், ஆண்டவர் எபோழுதும் என்னோடு பேசுவாரா? ஆம் அவர் பேசுகிற தெய்வம் அவர் மாறாதவர் உயிரோடு இருக்கிறார். அதற்கு நாங்கள் சாட்சிகள் ஆமென்! கர்த்தருடைய புஸ்தகமாகிய வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன் வரை தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருசில மனிதர்கள் மூலம் மற்ற ஜனங்களோடு இடைபட்டார் அல்லது பேசினார். ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறின பின் அவரால் வாகுத்தத்தமாய் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வந்து அவரை விசுவாசிக்கிற எல்லாரோடும் பேசுகிறவராய்/ஒவ்வொருவரையும் வழி நடத்துகிறவராய் கொடுக்கப்பட்டும் இருக்கிறார் ஆமென்! 
 
ஆவியானவர் என்ன செய்வார்!

யோவான் 16:  “7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்
.ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தபடியே தேற்றரவாளன் கொடுக்கப்பட்டார் ஆமென்! “யோவான் 16: 8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் வந்து வாசம் பண்ணும் போது அவர் செய்கிற மூன்று காரியங்கள் உண்டு பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார், என்பதை, நான் ஆவியானவரை பெற்றுக்கொண்டதால் அவர் எண்ணிலிருந்து உலகத்தை கண்டித்து உணர்த்துவார் என்று நாம்மில் பலர் நினைக்கிறோம் – உண்மைதான் ஆனாலும் முதலாவது நம்மில் பாவமில்லாத நடக்கையை குறித்தும் நாம் தேவ நீதியின்படி நடக்கிறதை பற்றியும், அப்படி அவர் சொல்லுகிறதை கீழ்ப்படிந்து நடக்கவில்லையென்றால் நியாயதீர்ப்பை குறித்தும் நம்மிடம் கண்டித்து உணர்த்துவார் என்பதை அநேக நேரம் மறந்துபோகிறோம் “ரோமர் 2 : 21. இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?   ஆகவே மிகுந்த கவனத்தோடு ஆவியானவர் சொல்லுகிறதை அது மற்றவர்களுக்காகவே சொன்னாலும் நாமும் அப்படிப்பட்ட காரியத்திலிருக்கிறோமா என்று நம்மை நாமே சோதித்து அறிந்தால் நலமாயிருக்குமே! அதற்காய்  பிராயசப்படுவோம் தேவன் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்டக்கிருபையை தருவாராக ஆமென்!
“யோவான் 16:  9. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்”. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவில்லையென்றால் அது பாவம் என்பதையும் விசுவாசியாதவர்கள் அடையப்போகிற ஆக்கினையை குறித்தும் கண்டித்து உணர்த்துவார் “யோவான் 16: 10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், தேவனுடைய நீதியான கிரியைகளை குறித்தும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லது செய்கையிலும் முக்கியமாக நம்முடைய தினசரி நடக்கையிலும் சொல்லித்தந்து நடத்துவார்! எப்படியென்றால் நாம் செல்லுகிற வழியில் ஒரு பிச்சையெடுக்கும் நபரை பார்ப்போமென்றால் ஆவியானவர் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்யும்படி நம்மை தேவவார்தையின்படி நமக்கு நினைப்பூட்டி நம்மை நடத்துவார். “உபாகமம் 15 : 11. தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.” ஆமென்!

“யோவான் 16: 13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்”. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் தாம் கேள்விப்பட்டவைகளையே கற்றுதந்து அனுதினமும் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறவராயிருக்கிறார்.

தேவனுடைய புத்திரர்கள்

 “ரோமர் 8 : 14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” நாம் ஆவியினாலே நடத்தப்படுவோமானால் தேவபுத்திரராய் இருக்கிறோம். அப்படி நடத்தப்படாத பட்சத்தில் நாம் தேவபுத்திரர்கள் அல்ல, ஆகவே ஆவியானவரை பெற்றிருக்கிறேன் என்று சொல்லுகிற தேவ பிள்ளைகளே! தேவன் உங்களை நடத்துகிற அனுபவம் உண்டா? சற்று ஆராய்ந்து பார்ப்போம்! அப்படி தேவன் நடத்துகிற பட்சத்தில் மற்றவர்களை நாடித்தேடி ஆண்டவர் எனக்கு என்ன தீர்க்கதரிசனம் சொல்லுவார் என்று தேடி ஓடவேண்டிய அவசியமில்லையே! சற்று நிதானித்து அறிந்து பார்ப்போம்! தேவனுடைய வார்த்தை ஆம் என்றும் ஆமென் என்றும் இருகிறதே! வழி இதுவே என்கிற சத்தம் கேட்கவேண்டும் அல்லவோ! தேவன் பேசுகிறவராய் இருக்கிறாரே! அவருடைய சத்திய வேதத்தை நாம் வாசித்து தியானிக்கும்போது அவருடைய வேதம் நமக்கு வெளிச்சமாய் மனமகிழ்ச்சியாய் இருக்கிறதே! உபாகமம் 6: 6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, இப்படிபோல எப்பொழுதும் தேவனுடைய வார்த்தைகளை இருதயத்தில் வைத்து அதேயே தியானிக்கும் போது, அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது அந்த வார்த்தைகள் நமக்கு ஜீவனுயும், ஓவ்வொரு நேரமும் நமது வாழ்வுக்கு வேண்டிய ஆலோசனையும் தந்து நடத்துகிறதாயும் இருக்குமே!  அந்த வார்த்தைகள் நம் இருதயத்தில் பெலன்கொள்ள செய்து நடத்துகிறதாயிருகிறதே! தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமென்! இன்றே ஆவியானவரின் பூரணநடத்துதலுக்கு நம்மை ஒப்புகொடுப்போம்! ஒவ்வொரு காரியத்திலும் அவர் நம்மை நடத்தும்படி அவருடைய சத்தத்தை கேட்கிறதற்கு நம்மை ஒப்புகொடுபோமா? 


கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக! ஆமென்!